இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரையும் வென்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. வழக்கம்போல் ரோஹித் சர்மா சொதப்பினாலும், தவான் மற்றும் ரெய்னா பொறுப்புடன் விளையாடி 47 மற்றும் 43 ரன்கள் அடித்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் அடித்தது
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, 19வது ஓவரில் 16 ரன்கள் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கடைசி ஓவரை பும்ரா வீசினார். அவரது ஓவரில் 11 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது
சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாகவும், புவனேஷ்குமார் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை மட்டுமே இழந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது