இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது திறமையை அணிக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவருக்குப் பின்னான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பதில் சஞ்சு சாம்சனுக்கும், ரிஷ்ப் பண்ட்டுக்கும் இடையே கடுமையானப் போட்டி உருவாகியுள்ளது.
கடந்த ஓராண்டாக பண்ட்டுக்கு அதிக வாய்ப்புகளை அணி நிர்வாகம் அள்ளித் தந்தது. ஆனால் அவர் அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. இது சம்மந்தமாகப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் ‘மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்க்கப்பட்டு இருப்பது ரிஷப் பந்த்துக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்திருக்கிறது. ஏனெனில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை பண்ட் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் அணிக்குள் இருந்தாலே ஒருதுருப்புச் சீட்டுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
ரிஷப் பந்த் பலமுறை பல்வேறு விதமான மனநிலையில் களமிறங்கி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.ஆனாலும் அவர்தான் விக்கெட் கீப்பர் தேர்வில் முன்னிலையில் இருக்கிறார். கூடிய சீக்கிரம் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் அல்லது சஞ்சு சாம்சனுக்கு வழிவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளர்.