ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்- வீராங்கனைகள் மொத்தம் 8 தங்கப்பதக்கம் வென்றனர். மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத், சுமித் மாலிக். குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம், கவுரவ் சோலங்கி, விகாஷ் கிரிஷன். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புத். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்- சவுரவ் கோஷல். டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பதரா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி. சிந்துவை எதிர்த்து களம் இறங்கினார். இந்த போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.