நேற்றைய டி 20 போட்டியில் இந்திய அணி கன்கஸன் விதிகளை மீறிவிட்டதாக சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி நேற்று கான்பெராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைச் சேர்ந்த கே எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். பேட்டிங் செய்யும் போது இந்திய அணியின் ஜடேஜா காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக கன்கஸன் விதிகளின் படி மாற்று வீரராக சஹால் தேர்வு செய்யப்பட்டு அவர் சிறப்பாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இந்நிலையில் சஹாலை எடுத்தது குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் அளித்த நேர்காணலில் இந்தியா கன்கஸன் விதிகளை மீறியுள்ளதாகவே நான் நினைக்கிறேன். ஜடேஜாவுக்கு உண்மையாகவே காயம்பட்டு இருந்தால் களத்துக்கு உடல்தகுதி நிபுணர் வந்திருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு ஜடேஜா 4 பந்துகளை விளையாடிவிட்டு பெவிலியன் திரும்பி தன்னால் விளையாட முடியாது என்று சொன்னதால் நடுவர் டேவிட் பூனுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. எனக் கூறியுள்ளார். ஆனால் ஜடேஜா காயம் காரணமாக அடுத்த இரண்டு டி20 போட்டியில் இருந்தும் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.