பழந்தமிழர் காலம் முதலே கேழ்வரகு என்பது நமது உணவு பொருட்களில் முக்கியமான தானியமாக இருந்து வருகிறது. மேலும் கேழ்வரகு அதிகமான இரும்பு மற்றும் நார்ச்சத்தை கொண்டுள்ளது. எனவே கேழ்வரகில் பாயாசம் செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும்.
ராகி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
• ராகி மாவு - 1 கப்
• பால் – 3 கப்
• வெல்லம் – ½ கப்
• ஏலக்காய் தூள் – ¼ கப்
• உலர் திராட்சை மற்றும் முந்திரி - தேவையான அளவு
• நெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1. முதலில் கிண்டுவதற்கு ஏதுவான அகலமான பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கட்டி பிடிக்காமல் கலக்கி கொள்ள வேண்டும்.
2. இதற்கு நடுவே வைத்திருக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
3. கட்டி இல்லாத அளவிற்கு தண்ணீர் விட்டு கலக்கிய பிறகு ராகியை அடுப்பில் வைத்து குறைந்த வெப்பத்தில் கிண்ட வேண்டும். கிண்டும்போதே கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்துக்கொண்டே கிண்டவும்.
4. அதன் பிறகு அதில் தயாராக வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து வெல்லை கரையும் வரை கிண்டவும்.
5. பாயாசம் நன்கு கொதித்து வரும் வேளையில் அதில் ஏலக்காய் தூள், உலர் திராட்சை, முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
6. இறுதியாக இறக்கிய பாயாசத்தில் நெய் சேர்த்து கிளறினால் சுவையான ராகி பாயாசம் தயார்.
இதை பெரியவர்கள், சிறுவர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம். வெல்லத்திற்கு பதிலாக பனங்கற்கண்டும் சேர்க்கலாம். விருப்பப்படுபவர்கள் கேழ்வரகுடன் சேமியாவை சேர்த்தும் இந்த பாயாசத்தை செய்யலாம்.