சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்ததை முன்னிட்டு, ஐஐஎஃப்ஏ இசை நிகழ்ச்சியொன்றை நடத்தியுள்ளது.
ஆஸ்கர் மற்றும் கிராமி உள்பட பல விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகின்றன. இதை, இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி கொண்டாடியது. இரண்டு மணி நேர ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியுடன் நடந்த இந்த நிகழ்வில், ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடிய பல பாடகர்கள் கலந்துகொண்டு தமிழ் மற்றும் ஹிந்திப் பாடல்களைப் பாடினர்.
ஆஸ்கர் விருதுப் பாடலான ‘ஜெய்ஹோ…’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியபோது, ஆரஞ்ச், வெள்ளை, பச்சை என தேசியக்கொடியின் நிறங்களில் மேடை விளக்குகள் பளிச்சிட்டன. ‘ஊர்வசி… ஊர்வசி…’, ‘அந்த அரபிக் கடலோரம்…’ பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடும்போது, ‘காற்று வெளியிடை’ படத்தின் நாயகியான அதிதி ராவ் ஹைடாரியும் அவருடன் இணைந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் எல்லோருக்கும் நன்றி கூறிய ரஹ்மானுக்கு, மரியாதை செய்யப்பட்டது.