நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து தனது 60-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகளில் கவனம் செலுத்து வரும் படக்குழுவினர் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். இதில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
சமீபத்தில் கூட இப்படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி இளமையான தோற்றத்தில் உள்ள அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தில் அஜித்தின் கெட்டப் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தற்காலிகமாக AK 60 என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே கொண்டாட்டத்தில் உச்சத்தில் குதூகலித்து வருகின்றனர். காரணம் ஏற்கனவே அஜித் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கச்செய்தார். எனவே இந்த படமும் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.