Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

என் கூட நடிக்க ஹீரோயின்ஸ் தயங்கினாங்க… வைரல் ஆகும் விஜயகாந்த்தின் பழைய பேட்டி!

என் கூட நடிக்க ஹீரோயின்ஸ் தயங்கினாங்க… வைரல் ஆகும் விஜயகாந்த்தின் பழைய பேட்டி!
, வியாழன், 28 டிசம்பர் 2023 (14:15 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இயற்கை எய்தியதை அடுத்து அவரைப் பற்றி பல நெகிழ்வான சம்பவங்கள் இப்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 1986 ஆம் ஆண்டு சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு தான் பட்ட கஷ்டங்கள் பற்றி விஜயகாந்த் அளித்த ஒரு நேர்காணல் இப்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

விஜயகாந்தின் நேர்காணல்:-

இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.


webdunia

 
முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்.
ஆனா, ‘இனிக்கும் இளமை' படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, ‘அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்‘னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு!

‘அகல் விளக்கு' படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு' படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை!

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டறை' படத்துக்கு என்னை புக் பண்ணினார். ‘ஒருதலை ராகம்' படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் நடிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் ‘நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கனும்’னு சொல்லிட்டார்.

webdunia

 
‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் ‘வாஷ்' பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். ‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர்.

மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் ‘சாட்சி' படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘

‘‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. ‘பார்வையின் மறுபக்கம்' படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை’ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க... நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை!
இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க'னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்' என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே ‘தங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்கிற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?’’


webdunia

 
‘‘தங்கள் படங்கள்ல ஒரு நாளாவது என்னை நடிக்க வெச்சு, அதுக்குப் பிறகு அந்தப் படத்தையே கேன்ஸல் பண்ணிட்டு, ‘விஜயகாந்துக்கு நடிக்க வரலை. அதனாலதான் அந்தப் படத்தை எடுக்கலை’னு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கணும்னு இன்னிக்கும் ஆசைப்படற பெரிய மனிதர்கள் இருக்காங்க தெரியுமா? அதே சமயம் இவங்களே பினாமி மூலம் கால்ஷீட் கேட்கறதும் உண்டு. அவங்க மேலேயே நான் கோபப்படலை, நடிகைகள் மேலா கோபப்படப் போறேன்..?

இன்னிக்குச் சொல்றேன், எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை.

"நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது. தினமும் முப்பது, நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்.’’

‘‘இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?ன்னு கேட்டா அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்' கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன். இதெல்லாம் நான் நடிகனாகறதுக்கு முன்னாடியே! நான் சாப்பாடு போடறதை விளம்பரம் பண்ணியா போடறேன்..? அதேமாதிரி என் சொந்தப் படமான ‘உழவன் மகன்' ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது. கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை...’’
  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் மறைவு - பவன் கல்யாண் மற்றும் சசிகலா இரங்கல்