நடிகை கடத்தல் வழக்கில் கைதான திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவெடுத்தது ஏன் என நடிகர் மோகன்லாலுக்கு எதிராக மலையாள நடிகைகள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மலையாள நடிகர் சங்க தலைவராக தேர்வான மோகன்லால் நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் திலீப்பை சங்கத்தில் சேர்த்தார். இதற்கு மலையாள நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகள் குற்றவாளியை எப்படி சங்கத்தில் சேர்க்கலாம் என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.
கடும் எதிர்ப்பால் மோகன்லால் திலீப் விஷயத்தில் பின்வாங்கினார் நீதிமன்றத்தில் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் தள்ளி இருப்பார் என்று அறிவித்தார். அதன்பின்பு பல்வேறு பல்வேறு சமாதான நடவடிக்கைகளுக்கு பிறகு நடிகைகள் அமைதியானார்கள்,
இந்த நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் ‘‘திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க ஏன் முடிவு எடுத்தீர்கள்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த கடிதத்தால் மலையாள பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.