நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் 48 நிமிடங்கள் உரையாற்றினார்.
வழக்கமாக தன்னுடைய மேடைப் பேச்சுகளில் மிகவும் தன்மையாக பேசும் விஜய், நேற்று அரசியல் மேடையில் ஆவேசமாக ஆர்ப்பரித்தார். தனது பேச்சில் பல அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் போற்றியும் விமர்சித்தும் பேசினார். அவரின் பேச்சு தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தன்னுடைய பேச்சின் நடுவே பெயர் குறிப்பிடாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் விஜய்யின் பேச்சுக்கு நக்கலாக எதிர்வினையாற்றியுள்ளார். அவரின் எக்ஸ் தளப் பக்கத்தில் “யப்பா… உன் கூடவா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி, வியப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு??? பாப்போம்” எனக் கேலியாக பதிவிட்டுள்ளார்.