மும்பையில் கட்டப்பட்ட அடல் சேது பாலத்தில் வைத்து ராஷ்மிகா செய்த விளம்பர வீடியோவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.
கன்னட திரையுலகம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவர் தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். எனினும் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் ராஷ்மிகா சிக்கி வருகிறார். தற்போது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விளம்பர வீடியோவில் ராஷ்மிகா நடித்துள்ளார். அதில் மும்பையில் புதிதாக கட்டப்பட்ட அடல் சேது பாலத்தில் நின்று பேசும் அவர், பாலத்தின் சிறப்புகளை கூறுவதோடு கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் கட்டமைப்பு மிகவும் மேம்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இந்தியா வளர்ச்சி அடைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதில் நேரடியாக எந்த அரசியல் கட்சி பெயரையும் அவர் சொல்லவில்லை என்றாலும் இது மறைமுகமாக பாஜக ஆதரவு வீடியோவாகவே அமைந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்த வீடியோவை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ள நிலையில் அதில் பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பேசி வருகின்றனர். சிலர் அரசியலுக்குள் சென்று சினிமா கெரியரை இழந்து விடாதீர்கள் என்று ராஷ்மிகாவுக்கு கமெண்டில் அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.