ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த தனிக்குழு அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை இருக்கும் நிலையில், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களில் தணிக்கை இல்லை என்பதால் ஆபாச காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்றும், இதற்காக தனி குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்வது, ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றை அரசு பார்த்துக் கொள்ளும் என்றும் இதற்கு பொதுநல மனு அவசியமற்றது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், தணிக்கை மற்றும் ஒழுங்குபடுத்துதல் தேவையா இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உடன் அரசு ஆலோசித்து கொள்கை முடிவு எடுக்கும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.