Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

என்னால் 5 நிமிடம் கூட மண்டேலா படத்தைப் பார்க்க முடியவில்லை… எழுத்தாளார் சாருநிவேதிதாவின் சர்ச்சைக் கருத்து!

என்னால் 5 நிமிடம் கூட மண்டேலா படத்தைப் பார்க்க முடியவில்லை… எழுத்தாளார் சாருநிவேதிதாவின் சர்ச்சைக் கருத்து!
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:18 IST)
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள மண்டேலா படத்தை குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது கருத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார்.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் முகநூல் பதிவு :-

"பொதுவாக கமர்ஷியல் மசாலா படங்களில் எனக்குப் பிரச்சினையே இருப்பதில்லை. சர்க்கார் என்று ஒரு படம். எனக்கு விஜய் படங்கள் என்றால் பிடிக்கும். கோவிலில் செருப்பைக் கழற்றி செருப்பு மாடத்தில் வைத்து விட்டுப் போவது போல், விஜய் படங்களில் நம் மூளையைக் கழற்றி வீட்டிலேயே பத்திரமாக வைத்து விட்டுப் போய், இரண்டு மணி நேரம் ஜாலியாக இருந்து விட்டு வரலாம். அதிலும் எனக்காகவே படைக்கப்பட்ட ஆத்மா விஜய். ஏனென்றால், நடிகருக்கு உடல் எப்படியோ அப்படி மூளை எனக்கு. என்னுடைய செயல்படு களமே மூளைதான். இருபத்து நாலு மணி நேரமும் மூளை வேலை தான். உறங்கும்போது கூட மனம் பாட்டுக்கு ஒரு பக்கம் கதைகளை எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கிறது. ஸீரோ டிகிரி நாவலில் சில இடங்கள் அப்படி எழுதியதே. அதற்கு அடுத்து சில பத்தாண்டுகள் கழித்து இப்போது தியாகராஜாவில் அது நடக்கிறது. இப்படி ஓய்வின்றி உழைக்கும் மூளைக்கு ஓய்வு கொடுப்பவர் என் அன்பு விஜய்.

அப்பேர்ப்பட்ட விஜய் ரசிகனான எனக்கே சர்கார் என்ற படம் கொஞ்சம் தாங்க முடியாமல் தான் இருந்தது. காரணம், ஜெயமோகன். வெண்முரவு நாவலின் பல பக்கங்களைத் தவறுதலாக படத்தின் வசனத்தோடு சேர்த்து மெயில் பண்ணி விட்டார் போல. முருகதாஸும் ஆசான் அனுப்பியதாயிற்றே என்று அப்படியே சேர்த்து விட, அதுவரை நல்ல முறையில் எம்ஜியாரைப் போல் ஃபைட்டும், கமல் போல் டான்ஸும் ஆடிக் கொண்டிருந்த என் விஜய், வீரபாண்டியக் கட்ட பொம்முவை விட அதிகமாக வசனம் பேசி விட்டார். ஆனால் அத்தனை வசனம் பேசியும் அவருக்கு வேர்க்காமல் இருந்தது தான் எங்கள் விஜயின் சிறப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

"சரி, சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன். அப்பேர்ப்பட்ட வசன காவியமான சர்காரையே நான் ரெண்டு தடவை பார்த்தேன். ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த சமூக சிந்தனாவாதிகளின் படங்களில் தான். சமூகத்தைப் பற்றி யோசிக்கிறேன் என்று படம் பண்ணினாலே படத்தைக் கோட்டை விட்டு விடுகிறார்கள். அதாவது, சினிமாவின் அடிப்படைப் பண்பு – நான் வேளுக்குடியின் ஆன்மீக உபந்நியாசத்தைக் கேட்க சினிமா பார்க்கவில்லை. கதா காலட்சேபத்தைக் கேட்க வரவில்லை. அல்லது, பெரியாரின், சீமானின் சமூக சீர்திருத்த உரைகளைக் கேட்க சினிமாவுக்கு வரவில்லை. நான் வந்தது சினிமா பார்க்க. அப்படியானால் என்னை ரெண்டு மணி நேரம் உட்கார வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
webdunia
கோப்புப் படம்

இந்த உலகத்தின் ஆக மொக்கை படமான, பக்கம் பக்கமாக வசனம் பேசும் சர்கார் படத்தையே என்னால் ரெண்டு முறை பார்க்க முடிகிறது என்றால், ஒரு படத்தின் ஐந்தே நிமிடத்தில் என்னை இருக்கையிலிருந்து விரட்டி அடிக்கும் உங்கள் சினிமா திறமையை என்னவென்று சொல்ல? சினிமாவா இது? எல்லாமே செயற்கை. சர்காரிலும் செயற்கை தான். ஆனால் முருகதாஸால் என்னை இருக்கையை விட்டு விரட்டாமல் சொல்லத் தெரிந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியவில்லை.

ஐந்து நிமிடத்தில் வரும் இலவசக் கழிப்பறைக் காட்சி எல்லாம் படமா ஐயா? இதன் பெயர் சினிமாவா? எங்கள் கிராமத்தில் ஸ்கூல் டிராமா போடும் குழந்தைகள் கூட இதை விட நல்ல முறையில் போடுமே, டைரக்டர்? இலவசக் கழிப்பறை காட்சியின் மூலம், சமூகத்தை அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த விஷயத்தில் நீங்களும் நானும் ஒரே கட்சி தான். ஆனால் உங்களுக்கு சினிமாவாக அதைச் சொல்லத் தெரியவில்லை.

எங்கே நீங்கள் தோற்றுப் போகிறீர்கள் என்றால், வசந்த பாலனின் அங்காடித் தெரு படத்தை நான் கிழி கிழி என்று கிழித்து விமர்சனம் எழுதினேன். ஆனால் அதை என்னால் ரெண்டு மணி நேரம் பார்க்க முடிந்தது. ஐந்தே நிமிடத்தில் வசந்த பாலன் என்னைத் தியேட்டரை விட்டே விரட்டவில்லை. பார்க்க வைத்தார். ரெண்டு மணி நேரம் உட்கார வைத்தார். ஆனால் உங்கள் படத்தை என்னால் அஞ்சு நிமிடம் கூடப் பார்க்க முடியவில்லையே நண்பா? அந்தக் கழிப்பறைக் காட்சியெல்லாம் எவ்வளவு செயற்கையாக இருக்கிறது தெரியுமா?

உண்மையில் நீங்கள் மக்களின் சினிமா ரசனையை மலினப்படுத்துகிறீர்கள். ஆனால் மக்களை நான் குறை சொல்ல மாட்டேன். பருத்தி வீரன் போன்ற நல்ல படத்துக்கு (அது கமர்ஷியல் ஃபார்முலாவிலேயே வந்தாலும்) அவர்கள் அமோக ஆதரவு அளித்தவர்கள். எனவே, நீங்கள் இது போன்ற சமூக விமர்சனப் படங்களை எடுக்க வேண்டுமானால் அதற்கு சமூக விமர்சனம் மட்டும் போதாது. முருகதாஸ், லிங்குசாமி போன்றவர்களின் டெக்னிக்கைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், வாருங்கள், நாம் ரெண்டு பேருமே சேர்ந்து சில ஐரோப்பியப் படங்களைப் பார்ப்போம். உலகத் தரமான படங்களை எடுங்கள்… வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது பார்சல்… கர்ணன் படத்துக்கு குவியும் பாராட்டுகள்!