காலம் கடந்து, பல வருடங்களுக்குப் பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறது தமிழ் சினிமா.
காசைவிட கைதட்டலை எதிர்பார்ப்பவன் தான் கலைஞன். ஆயிரம் ரூபாய் தராத சந்தோஷத்தை, ஒருசில கைதட்டல்கள் அவனுக்கு கொடுத்துவிடும். ஆனால், அது காலாகாலத்தில் கிடைக்க வேண்டும். தமிழக அரசால் வருடம்தோறும் சினிமாவுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகள், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. பல வருடங்கள் கழித்து, 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரைக்குமான விருதுகளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.
அதில், 2009ஆம் ஆண்டு சிறந்த எடிட்டருக்கான விருது, ‘ஈரம்’ படத்தில் பணியாற்றிய மறைந்த கிஷோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லெனின் மற்றும் வி.டி.விஜயனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கிஷோர், ‘ஈரம்’ படத்தின் மூலம் தான் எடிட்டராக அறிமுகமானார். இந்த விருது அடுத்த வருடமே அவருக்கு கிடைத்திருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்? 70க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய கிஷோர், கடந்த 2015ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்.
அதேபோலத்தான் நா.முத்துக்குமாருக்கும். 2012, 2013, 2014 என வரிசையாக சிறந்த பாடலாசிரியருக்கான விருது நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சந்தோஷத்தைக் கொண்டாட அவர் இப்போது உயிருடன் இல்லை. கடந்த வருடம் அவர் மறைந்துவிட்டார். எனவே, உரிய நேரத்தில் கலைஞர்களை கவுரவப்படுத்தி, அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.