“காஃபி வித் டி" திரைப்பட இயக்குநர் விஷால் மிஸ்ராவுக்கு, தாவூத் இப்ராஹிம் கூட்டாளியிடம் தரப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
“காஃபி வித் டி” என்ற இந்தித் திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது. மும்பையின் பிரபல தாதா என அறியப்படும் தாவூத் இப்ராகிமை மையமாக வைத்துத்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இதில் டி என்பது தாவூதைக் குறிக்கிறதாம்.
தில்லியைச் சேர்ந்த நிருபர் ஒருவர் கடும் முயற்சிகளுக்குப் பிறகு தாவூதைச் சந்தித்துப் பேட்டி காண்பது போலான கதையமைப்பைக் கொண்டுள்ள படம் என்பதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளதாம்.
விஷால் மிஸ்ரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டபோது அதில் தாவூதைக் கிண்டல் செய்வது போலக் காட்சிகள் இருப்பதாகக் கூறி தாவூதின் கூட்டாளி சோட்டா ஷகீலிடமிருந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது.
’நீங்கள் உயிருடன் இருந்து படங்களைத் தொடர்ந்து தயாரிக்க வேண்டுமெனில் உடனடியாக ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கி விடுங்கள்’ என்று கூறியதாக புதுடெல்லி காவல்துறையிடம் அவர் புகார் செய்துள்ளார்.