நடிகர் அஜித்குமார் துபாயில் புத்தாண்டை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் சிலரது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
தமிழ் சினிமா நடிகரான அஜித்குமார் பெரும்பாலும் பொது இடங்களில் தோன்றுவதை பல காலமாக தவிர்த்தே வருகிறார். இவர் நடிக்கும் படங்களுக்கான இசை வெளியீடு, ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கே அஜித் வருவதில்லை என்பது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள அஜித்குமார் அங்கேயே தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு நடுவே தற்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக துபாய் சென்றுள்ளார் அஜித். அங்கு கப்பலில் சிலர் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட வீடியோவும், புத்தாண்டை முன்னிட்டு அஜித் டான்ஸ் ஆடும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆனால் கடந்த சில நாட்கள் முன்னதாக தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இறந்தபோது அஜித் நேரில் வராமல் போன் மூலம் இரங்கல் தெரிவித்தது பலருக்கும் அதிருப்தியையே ஏற்படுத்தியிருந்தது. இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கம் உயிர்ப்போடு செயல்பட காரணமாக இருந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஒரு நபருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்தது.
இந்நிலையில் தற்போது புத்தாண்டில் துபாயில் அஜித் ஆடும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், புத்தாண்டிற்கு துபாய் சென்று டான்ஸ் ஆட நேரம் இருப்பவருக்கு, ஒருநாள் வந்து விஜயகாந்திற்கு மரியாதை செலுத்த நேரமில்லை என மனக்குமுறலை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.