ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுத்து வரும் கௌதம் மேனனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்ற பெயரிலும் பிரியதர்ஷினி தெ அயர்ன் லேடி என்ற பெயரிலும் படமாக எடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர். இரண்டு படங்களிலும் முறையே கங்கனா ரனாவத் மற்றும் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்வை மையமாக வைத்து கௌதம் மேனன் பிரசாத் முருகேசன் என்பவருடன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கும் முனைப்பில் உள்ளார். அதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் நேரடி பயோபிக்காக இல்லாமல் அவரது வாழ்வை மையப்படுத்திய புனைவாக உருவாக இருக்கிறதாம். இதில் ரம்யா கிருஷ்ணன் சக்தி என்ற பெயரில் நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸூக்கு குயின் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது இந்த வெப் சீரிஸ் பற்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து 'குயின்' என்ற வெப் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். என் அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ’தலைவி’ என்ற பெயரில் தான் எடுத்து வரும் படத்தின் கதையை என்னிடம் கூறிய இயக்குநர் விஜய் படத்தைத் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழும் பெற்றுச் சென்றார்.
இந்த சூழலில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித்துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம். யார் ’குயின்’ என்பதை கௌதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்'