பிரபல மேடை நடிகரும் சினிமா குணசித்திர நடிகருமான சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
1980 களில் மேடை நாடகங்களில் நடித்து புகழுக்கு வந்தார் மோகன். இவரது சிறப்பான நடிப்பைப் பார்த்து வருஷம் பதினாறு, தளபதி அகியப் படங்களில் குணச்சித்திர வேடங்கள் கிடைக்க ஆரம்பித்தன. அந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தாலும் அவர் தொடர்ந்து மேடை நாடகங்களுக்கே முன்னுரிமை அளித்து நடித்தார்.
கிரேசி மோகன் இயக்கியப் பல மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனால் சீனு மோகன் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். சுமார் 3000 மேடை நாடகங்களுக்கு மேல் நடித்துள்ள சீனு மோகன், மீண்டும் இறைவிப் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இறைவியில் அவரது கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்டதால் அதைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை மற்றும் கோலமாவு கோகிலா ஆகியப் படங்களில் நடித்தார். இப்போது அவர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலன்று ரிலிசாக உள்ளது.
பல நாட்களாக சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை இதய முடக்கத்தால் காலமானார். அவரது உடலுக்கு திரை மற்றும் மேடை நாடக உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.