ராமோஜிராவ் பிலிம்சிட்டி எடுத்த அதிர்ச்சி முடிவு
ரஜினி, கமல், அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்கள் உள்பட பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் நடக்கும் என்பது தெரிந்ததே. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான பாகுபலி, பாகுபலி 2, சைரா நரசிம்ம ரெட்டி உள்பட பல திரைப்படங்களில் பிரம்மாண்டமான காட்சிகள் இந்த பிலிம் சிட்டியில் தான் படமாக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக இந்த பிலிம் சிட்டியில் எந்தவிதமான படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 60% ஊழியர்களுக்கு ’வேலை இல்லை என்றால் ஊதியம் இல்லை’ என்ற திட்டத்தை அமல்படுத்தியும் மீதி உள்ள ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியாத நிலையில் நிதி நெருக்கடியில் ராமோஜிராவ் நிறுவனம் சிக்கித் திணறி வருவதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் டிஸ்னிலேண்ட் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு இந்த பிலிம்சிட்டியை வாடகைக்கு அளிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் இதனை அடுத்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்கள், வெப்சீரிஸ்கள் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது
எனினும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இனிமேல், இந்த பிலிம்சிட்டியில் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஸ்டூடியோக்களில் ஒன்று என்ற புகழ்பெற்ற 1666 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராமோஜி பிலிம்சிட்டி நிறுவனம் எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது