பாமகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் மறைந்த வன்னியர் சங்க தலைவருமான ஜெ குருவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியைச் சேர்ந்தவர் காடுவெட்டி குரு. இவர் வன்னியர் சங்கத் தலைவராக பதவியேற்று வந்தார். மேலும் பாமக சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு எம் எல் ஏவாகவும் இருந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு வாக்கில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அதுபோல தமிழக அரசியலில் எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக வலம் வந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் பிரச்சனைக் காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது வாழ்க்கை வரலாறு இப்போது மாவீரன் குரு என்ற பெயரில் படமாக இருக்கிறது. அந்த படத்தை தமிழ்த்தாய் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.
இது சம்மந்தமாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘காடு வெட்டி குருவின் வாழ்க்கை அதிக பொருட்செலவில் படமாக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகர்- நடிகைகள் நடிக்க உள்ளனர். காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மேற்பார்வையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு முடிந்ததும் அரியலூர், பெரம்பலூர், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தினை இளம் இயக்குனர் இயக்குகிறார்.’ எனத் தெரிவித்துள்ளது.