இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் பெரும்பான்மையான மக்களுக்கு அவரது அரசியல் சார்ந்த திரைப்படங்களே பிடித்த படங்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் இந்தியன் மற்றும் முதல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்கள்தான் இயக்குனர் ஷங்கரின் அடையாள திரைப்படங்களாக இருக்கின்றன.
இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வெகு காலங்களாகவே நடந்து வருகிறது. பல இடையூறுகளுக்கு நடுவே ஒரு வழியாக அதன் முக்கால்வாசி பட வேலைகளை முடித்துவிட்டனர். மேலும் இந்த படத்தை இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கமல்ஹாசன் இந்தியன் 2 குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது எனக்கு இந்தியன் இரண்டாம் பாகம் படத்தின் கதை பிடித்த காரணத்தால்தான் அதில் நடித்தேன்.
நடிக்க துவங்கியப்போது அதை இரண்டு பாகங்களாக எடுக்க போகிறார்கள் என எனக்கு தெரியாது. இப்போதைய ஓ.டி.டி காலத்தில் எட்டு எபிசோடுகள் சேர்ந்ததுதான் ஒரு படம் என்கிற நிலை உள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தில் 8 பாடல்கள் இருக்கும். 22,000 அடிக்கு ரீல் இருக்கும்.
அதிலிருந்து 12,000 அடிக்கு குறைந்தது. ஆனால் மறுபடியும் இப்போது பழைய சினிமா போல 22,000 அடி ரீல் அளவிற்கு படம் எடுக்க துவங்கிவிட்டோம். எனவே இது இரண்டு பாகங்களாக வருவது இப்போதைய நிலையில் ஒரு விஷயமே இல்லை என கூறுகிறார் கமல்ஹாசன்.
மேலும் அவர் கூறும்போது நான் நடித்த படங்களிலேயே தசாவதாரம் மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள்தான் கடினமான படங்கள் என்பேன். மீண்டும் இந்த படங்களில் நடிக்க சொன்னால் கூட நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.