பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குனால் கம்ரா வெளியிட்ட டிவீட்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான குனால் கம்ரா வெளியிட்ட டிவீட்களில் உச்சநீதிமன்றத்தில் பாஜக கொடி பறப்பது போலவும், உச்சநீதிமன்றமே காவி நிறமாக இருப்பது போலவும் டிவீட் செய்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இந்நிலையில் அவரது செயல்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து அட்டர்னி ஜெனரல் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதி வழங்கியுள்ளார்.
குனால் கம்ரா கடந்த பிப்ரவரி மாதம் விமானப் பயணத்தின் போது ரிபப்ளிக் தொலைக்காட்சி அர்னாப் கோசாமியிடம் கேள்விகளைக் கேட்டு அதை வீடியோவாக எடுத்து பதிவேற்றி இருந்தார். அதனால் இண்டிகோ விமானம் இவர் வாழ்நாள் முழுவதும் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.