கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ரிலீஸ் ஆன மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் தமிழகம் மற்றும் கேரளாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் சர்ச்சையான விமர்சனத்தை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில் “மஞ்சும்மெல் பாய்ஸ் எனக்கு எரிச்சல் ஊட்டும் படமாக இருந்தது என்றும் அதில் காட்டுவது புனைவு அல்ல, தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது. குடி குடி குடி என விழுந்து கிடப்பது, வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, எந்த பொது நாகரீகமும் அவர்களுக்கு கிடையாது. இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது, ஆனால் அவர்கள் மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற தெனாவட்டு இருக்கும். ஒரு தமிழ் கதாநாயகன் எத்தகைய பொறுக்கிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவானோ, அத்தைய பொறுக்கிதான் இந்த படத்தின் கதாநாயகன்.” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த விமர்சனத்துக்கும் ஆதரவும் எதிர்ப்பும் வலுவாக எழுந்துள்ளது.
இந்நிலையில் மலையாள எழுத்தாளரான உண்ணி ஆர் “பொருளாதார அடிமட்டத்தில் வசிக்கும் அந்த நண்பர்கள் குழுவை அவர் பொறுக்கிகளாகப் பார்க்கிறார். ஆனால் குழிக்குள் விழுந்துவிட்ட நண்பரைக் காப்பாற்ற போராடும் மனிதாபிமானத்தை அவர் பார்க்கத் தவறிவிட்டார். குழிக்குள் விழுந்தவர் இறக்கவேண்டும் என நினைக்கிறார். சமீபத்தில் இயற்கை பேரிடர்கள் வந்த் போது தமிழர்களும் மலையாளிகளும் ஒருவருக்கொருவர் கைநீட்டினர். அதில் குடிகாரர்களும் விபச்சாரிகளும் இருந்தனர். ஜெயமோகன் மலையாள சினிமாவுக்கு திரைக்கதை எழுத வந்தார். ஆனால் அவருக்கு திரைக்கதை எழுத தெரியாது என்பது தெரிந்ததும் அவரை ஒதுக்கிவிட்டனர். அதற்கான பழிவாங்கலாக அவர் இதை செய்கிறார் போலும்” எனக் கூறியுள்ளார்.