திருநெல்வேலி மாவட்ட துணை காவல் ஆய்வாளர் அர்ஜுன் சரவணன் ஷேர் செய்திருந்த டிவிட் ஒன்று இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழர்களுக்கு எந்தளவுக்கு வடிவேலு தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்றால் எது நடந்தாலும் அதை வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளோடு பொருத்திப் பார்க்கும் அளவுக்கு. அதுவும் இந்த மீம் கலாச்சாரம் வந்த பின்னர் ஒரு வடிவேலு மீமைக் கூட பார்க்காமல் நீங்கள் உங்கள் சமூகவலைதளப் பக்கத்தை கடக்க முடியாது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுன் சரவணன், வடிவேலுவை அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களோடு ஒப்பிடும் ஒரு வீடியோ துணுக்கை டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். அப்போது அவரது பதிவில் கமெண்ட் செய்த ஒருவர் ‘ஒரு போலீஸ் அதிகாரி இதுமாதிரி போஸ்ட் போடுவாறுன்னு நினைக்கல’ எனக் கூற அவருக்குப் பதிலளித்த அர்ஜுன் ‘போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே! இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து. #vadiveluforlife #Ilayarajaforsoul” எனப் பதில் தெரிவித்துள்ளார்.