ரயில் நிலையத்தில் தாய் இறந்தது தெரியாமல் அவரது உடலோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு ஆதரவு அளிப்பதாக ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நடந்தே சென்றது சென்ற மாதங்களில் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து மத்திய அரசு அதற்கான சிறப்பு ரயில்களை இயக்க ஆரம்பிததது. இதிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னதாக ஒரு ரயில் மக்களை ஏற்றிக்கொண்டு தவறான ஸ்டேஷனுக்கு சென்றது சர்ச்சைகளைக் கிளப்பியது.
இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தை வெளிப்படுத்தும் விதமாக நடந்துள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் சனிக்கிழமை ரயிலில் தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் கத்திகாருக்கு செல்வதற்காக ரயில் ஏறியுள்ளார் அந்த பெண். ஆனால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான உடல்நிலைக் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பிஹாரின் முசாபர்பூர் ரயில்வே நிலையத்தில் அந்த பெண்ணின் உடலோடு அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளனர்.
அங்கு உயிரிழந்த தனது தாயின் உடலில் போர்த்தியிருக்கும் போர்வையை இழுத்து அவரது குழந்தை விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் பரவிய் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு நடிகர் ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக அந்த குழந்தை அவனின் தாத்தா பாட்டியிடம் சேர்க்கப்பட்ட நிலையில் ‘தாயை இழந்து விளக்கமுடியாத வேதனையில் இருக்கும் அந்த குழந்தைக்கு அதைத் தாக்கக் கூடிய மனவலிமை கிடைக்க வேண்டும். நம்முடைய அன்பையும் ஆதரவையும் அந்த குழந்தைக்கு வழங்குவோம்.’ எனக் கூறியுள்ளார்.