மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் 22ஆம் தேதி மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சார்லி, இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும் , எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.
இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்' என்று தான் கூறவேண்டும்' இவ்வாறு நடிகர் சார்லி கூறினார்