சூரரை போற்று படத்தை ஓடிடிக்கு விற்றதற்காக கோலிவுட் வட்டாரத்தில் எதிர்ப்புகளை சந்தித்த நடிகர் சூர்யா திரைத்துறைக்கு 1.50 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்படம் அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்டதை தொடர்ந்து தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பலர் சூர்யாவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் அனைவரின் நலனையும் மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக சொன்ன சூர்யா “சூரரை போற்று” விற்கப்பட்ட தொகையில் ரூ.5 கோடியை திரைத்துறை வளர்ச்சிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன் முதற்கட்டமாக ரூ.1.50 கோடி ரூபாயை தமிழ் சினிமா சங்கங்களுக்கு ஒதுக்கியுள்ளார். அதன்படி பெப்சி அமைப்பிற்கு ரூ.1 கோடியும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் நிதியாக அளித்துள்ளார். இதனால் திரைத்துறையில் சூர்யா மீதுள்ள கோபம் மெல்ல குறைய தொடங்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.