விஜய்யின் ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ், ஒரே நேரத்தில் 7 படங்களைத் தயாரித்து வருகிறது.
விலங்குகளை வைத்துப் படமெடுத்த பிரபலமான இயக்குநர் ராம.நாராயணன், தான் இயக்கிய 80க்கும் மேற்பட்ட படங்களைத் தன்னுடைய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு மகன் முரளி ராமசாமியும், அவருடைய மனைவி ஹேமா ருக்மணியும் நிறுவனத்தைக் கையிலெடுத்து, பெரிய படங்களாகத் தயாரித்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் 120 கோடி ரூபாய் தயாரிப்பில் ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த இந்த நிறுவனம், 250 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஒரே நேரத்தில் 7 படங்களைத் தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.
சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள ‘சங்கமித்ரா’, தனுஷ் இயக்கி, நடிக்கும் படம், சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘இறவாக்காலம்’, எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம், ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் படங்கள் தான் அவை.