வடிவேலு நடிப்பதாகக் கூறப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்ட பேய்மாமா படம் உண்மையில் வெறும் புரளி என செய்திகள் வெளியாகி வருகின்றன.
வடிவேலு பீல்டு அவுட் ஆகி 8 வருடங்கள் ஆகி விட்டாலும் இன்றும் அவருக்கான தேவைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இடையில் அவர் கதாநாயகனாக நடித்த தெனாலி ராமன், எலி ஆகியப் படங்கள் எதுவும் பழைய வடிவேலுவை நமக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையி கடந்த ஆண்டு அவர் நடிப்பதாக இருந்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படமும் சிலப் பிரச்சனைகளால் கிடப்பில் உள்ளது.
வடிவேலுவை மிகப் பிரமாதமாகப் பயன்படுத்திய இயக்குனர்களில் ஒருவரான ஷக்தி சிதம்பரம் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்துள்ளதாகவும் அந்தப் படத்திற்கு பேய்மாமா எனப் பெயரிட்டுள்ளதாகவும் சில வாரங்களுக்கு முன்னர் போஸ்டர் ஒன்று வெளியானது. உடனே புலிகேசி படத்திற்கு முன்னதாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு போட்டது.
இதனால் பேய்மாமா படம் தள்ளிப் போயிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் உண்மை என்னவென்றால் வடிவேலுவின் பழைய ஸ்டில் ஒன்றை போடோஷாப் செய்து வடிவேலுக்கு ஒரு ஒன்லைன் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட போஸ்டர்தானாம் அது. அந்த கதையைக் கேட்ட வடிவேலு சம்பளப் பிரச்சனைகளால் அதில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டதாகவும், ஆனால் போஸ்டர் மட்டும் எப்படியோ வெளியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வடிவேலு ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.