பிரபல இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசன் திரிஷா வடிவேலு உள்பட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது திடீரென இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, வைகோ இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “காலத்தின் நாயகர்களே விரைந்து வருக இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது. நீங்கள் தந்த ஊக்கமதை ஒருக்காலும் மறவேன். 'கலிங்கப்பட்டியின் சிங்கம்' தலைவர் வைகோ அவர்களும் என் 'தென்கிழக்குச்சீமை' இயக்குனர் பாரதிராஜா அவர்களும் தொற்று நீங்கி நலமாக விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம்பெறவும் வலம்வரவும் வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.