தமிழ் சினிமாவுக்கு தன் படைப்புகளால் மகுடம் சூட்டிய இயக்குனர் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கவேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோக்களிலேயே அடைபட்டு கிடந்த தமிழ் சினிமாவை கிராமப் புறங்களுக்கு அழைத்து சென்று தமிழ் ரசிகர்களுக்கு நிஜமான கிராமங்களையும் அதன் ரத்தமும் சதையுமான மக்களையும் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. ரஜினி கமல் போன்ற இரு உச்ச நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் அவர்கள் இல்லாமலேயே காலம்கடந்து நிற்கும் படங்களைக் கொடுத்து இயக்குனர் இமயமாக உயர்ந்து நிற்கிறார். இன்று அவரது 77 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அவரால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவரான பாடலாசிரியர் வைரமுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ‘மண்ணின் இருதயத்தை, கண்ணின் கல்லீரை, அரிவாளின் அழகியலை, சரளைகளின் சரள வரிசையை,பாவப்பட்ட தெய்வங்களை, ஊனப்பட்டோரின் உளவியலை, கலாச்சார புதைபடிவங்களை கலை செய்த பாரதிராஜாவை தாதா சாகேப் பால்கே விருதுக்கு பரிந்துரைப்போம்’ எனக் கூறியுள்ளார். பால்கே விருது இந்தியாவில் சினிமாவில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச விருதாகும்.