நடிகர் விஜய்யின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று அவரின் 47 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரின் சக கலைஞர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் உழைப்பும் முக்கியக் காரணம்.
ஆரம்ப காலங்களில் விஜய்யின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தாலும், அவரை வைத்து படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்தார். அதே போல விஜய்க்கு மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. விஜய் எஸ் ஏ சியிடம் சமீபகாலமாக பேசுவது கூட இல்லை என்று சொல்லப்பட்டது. இதை எஸ் ஏ சியே அவர் அளித்த நேர்காணல்களில் ஒத்துக்கொண்டார்.
இந்நிலையில் எஸ். ஏ.சி. தன்னுடைய யுடியூப் சேனலில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன். ஷோபா இந்து மதக் குடும்பத்தில் பிறந்தவர். நாங்கள் இருவரும் மற்றவரை மதம் மாற சொல்லி கேட்டதே இல்லை. எங்கள் திருமணம் முதலில் இந்து மத முறைப் படி நடந்தது. பின்னர் 1980 ஆம் ஆண்டு ஷோபா நாம் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்டார். அப்போது விஜய்க்கு 6 வயது. ஷோபா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். விஜய் முன்னிலையில் நுங்கம்பாக்கம் சர்ச்சில் எங்கள் திருமணம் நடந்தது. விஜய் யாரிடம் வேண்டுமானாலும் பெருமையாக சொல்லலாம் தன் தலைமையில் தன் பெற்றோரின் திருமணம் நடந்தது என்று. அந்த திருமணம் நடந்த ராசியோ என்னவோ எனக்கு அடுத்த ஆண்டு சட்டம் என் கையில் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்து” பேசியுள்ளார்.