மாஸ்டர் ஆடியோ விழா: விஜய் கூறிய குட்டிக்கதை யாருக்கு?
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் விஜய் வழக்கமாக கூறும் குட்டிக்கதை ஒன்றை கூறினார். நான் நடித்த படத்தில் ஒரு பாடல் இருக்கின்றது. அந்த பாடலை நீங்கள் அனைவரும் கேட்டு இருப்பீர்கள். ’எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக்கொண்டிரு’ இந்த பாடலில் உள்ள நதி போல ஓடிக்கொண்டு என்பதுதான் நம் அனைவருடைய வாழ்க்கையும் உள்ளது.
ஒரு நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு அது தன்னுடைய பாதையில் சென்று ஓடிக்கொண்டிருக்கும். ஒரு இடத்தில் சிலர் பேர் கூடி நின்று விளக்குகளை ஏற்றி நதியை வணங்கி வழிபடுவார்கள். நதி அதனை கண்டுகொள்ளாமல் சென்று கொண்டே இருக்கும். இன்னொரு இடத்தில் சில பேர் பூக்களைத் தூவி நதிகளை வரவேற்பார்கள். அதையும் கண்டுகொள்ளாமல் அந்த நதி தன்னுடைய பாதையில் சென்று கொண்டே இருக்கும். இன்னொரு இடத்தில் பிடிக்காத சிலபேர் கல்லெறிந்து விளையாடுவார்கள். அதனையும் நதி கண்டுகொள்ளாமல் சென்று கொண்டே இருக்கும்.
இந்த நதிபோல் தான் நம்ம வாழ்க்கையும். நம்முடைய வாழ்வில் நம்மளை வணங்குபவர்களும் இருப்பார்கள், நம்மை வரவேற்பவர்களும் இருப்பார்கள். அதேபோல் நம்மளை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். நாம் எதையும் கண்டுகொள்ளாமல் நம்முடைய வேலையை சரியாக செய்து கொண்டு அந்த நதி போல் போய்க்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது’ என விஜய் பேசினார். விஜய் கூறிய இந்த குட்டிக்கதை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.