விஜய் சேதுபதி நடித்த ‘புறம்போக்கு’ படத்துக்கு எந்தத் தடையும் விதிக்காத சென்சார் போர்டு, ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற புறம்போக்கு என்ற வார்த்தையை நீக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது.
அதிகமாக பணம் புழங்கும் இடம் மட்டுமல்ல, கமல் கூற்றுப்படி அதிக ஊழல் நடைபெறும் இடமும் சினிமாத்துறை தான். ‘யு’ சான்றிதழ் பெற்ற தமிழ்ப் படங்கள், தமிழில் தலைப்பு வைத்திருந்தால், கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்தது தமிழக அரசு. எனவே, ‘யு’ சான்றிதழ் பெறுவதற்காக ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்து வந்தனர்.
அத்துடன், படத்தை உடனே பார்த்து சென்சார் சர்ட்டிஃபிகேட் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு தனியாகப் பணம் கொடுக்க வேண்டும். இது வெளியில் தெரிய வந்ததால், ஆன்லைன் மூலம் புக் செய்யும் முறையைக் கொண்டு வந்துள்ளது சென்சார் போர்டு. அதன்படி, பணம் கொடுத்து நினைத்த நேரத்தில் எல்லாம் சென்சார் சர்ட்டிஃபிகேட் கேட்க முடியாது. ஆன்லைனில் புக் செய்துள்ள வரிசைப்படிதான் சென்சார் போர்டு மெம்பர்கள் படம் பார்த்து சர்ட்டிஃபிகேட் கொடுப்பார்கள்.
அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தில், புறம்போக்கு என்ற வார்த்தை உள்ளது. அந்த வார்த்தையை அனுமதிக்க முடியாது என்று கூறிய சென்சார் போர்டு மெம்பர்கள், விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடித்த படத்துக்கு வைத்த ‘புறம்போக்கு’ என்ற தலைப்பை அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.