மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வருடத்திற்கு குறைந்தது எட்டு முதல் பத்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் ஏற்கனவே சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான 'Awe' என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த காஜல் அகர்வால் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாகவும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இடைவேளிக்கு பின் தோன்றும் ஒரு அதிரடி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் விஜய்சேதுபதி, காஜல் அகர்வால் முதல்முறையாக ஜோடி சேருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இந்த படம் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும், வரும் டிசம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.
முதல் பாகத்தில் பணிசெய்த பெரும்பாலான தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திலும் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் பிரசாந்த் வர்மா தெரிவித்துள்ளார்.