சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் வி.ம.இ., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மகளிரணி நிர்வாகி ஒருவர், இந்த நிகழ்ச்சியில் நீங்கள்தான் சொன்னீர்கள்….எங்களிடம் கூறியதை அப்படியே விஜய்யிடம் சொல்லுவோம் என்றீர்கள்…எங்கள் கோரிக்கை விஜய் சாரை சந்திக்க வேண்டும்..இதுதான் நாங்கள் கேட்பது….அவர் எப்போதும் எங்கள் உடன் பிறக்காத சகோதரர் தான்….இத மட்டும் கேட்டு சொல்லுங்க சார்…234 தொகுதிகளிலும் அவரை வரவைப்போம்….. நான் பயங்கர விஜய் பேன் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த், தலைவர் பெயரை தளபதி என்று கூற வேண்டும் என்றார்.
நடிகர் விஜய்யின் பெயரை விஜய் என்று கூறாமல் தளபதி என்று கூற வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இதுபற்றி தமிழ் டால்கீஸ் என்ற யூடியூப் சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறான் தன் சமூக வலைதள பக்கத்தில்,
அமெரிக்க அதிபராக இருந்தாலும் அங்கே அவரை பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள். உலகின் பல நாடுகளிலும் இப்படித்தான். ஆனால் தமிழகத்தில் இந்த அடைமொழி காமடிகள் உச்சத்தில் உள்ளன.
அப்படியெனில் 'தளபதி' மக்கள் இயக்கமென்று மாற்றவும். கெஜட்டில் கூட தளபதி என்று அவர் மாற்றிவிட்டால் சிறப்பாக இருக்கும். யார் எப்படி அழைத்தாலும்.. பொதுமக்களை பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜித் மட்டுமே.
உங்களையும் இனி ஆனந்த் என்று அழைக்காமல் Bussy சார் என்றுதான் அழைக்க வேண்டுமா?
அந்த உத்தரவையும் போட்டுவிட்டால் நன்று. ஏனெனில்.. விஜய்யை விட உங்களைத்தான் இந்த ரசிகர் மன்றத்தினர் அடிக்கடி சந்திக்கிறார்கள். உங்கள் அடைமொழி என்ன? சின்ன தளபதியா? தளபதியின் தளபதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.