தீபக் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸான திரைப்படம் விட்னஸ். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மலக்குழியில் விழுந்து உயிரிழக்கும் ஒரு இளைஞனின் தாய் அவனின் மரணத்துக்கு நீதிகேட்டு போராடுவதை காட்சிப் படுத்தியிருந்தது. இதனூடாக பெருநகரங்களில் வாழும் துப்புரவுத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் அலசியிருந்தது. படம் வெளியான போது பாராட்டுகளையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.
இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கும் தீபக், தற்போது தமிழ் சினிமா ஒரு மோசமான காலகட்டத்தில் இருப்பதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “2002 பாலிவுட்டுக்கு மோசமான ஆண்டு. இந்தி திரையுலகம் ஹீரோ வழிபாட்டில் மூழ்கியிருந்த காலம் அது. அந்த ஆண்டு இந்தியில் வெளியான 132 படங்களில் 124 படங்கள் தோல்வியடைந்தன. (அவுட்லுக் பத்திரிக்கை அப்போது வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டு)
தற்போதைய தமிழ் திரையுலகமும் இதே நிலையில்தான் உள்ளது. இதனால் சிறிய வணிகப் படங்களைத் தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன்வருவதில்லை. ஆனால் 2023-24 தமிழ்ப் படங்களில் சிறிய பட்ஜெட் படங்கள்தான் அதிக வெற்றியைப் பெற்றுள்ளன. இதே நிலை நீடித்தால் படங்கள் தயாரிப்பில் பெரும் நெருக்கடி ஏற்படும்.
பி கு: ஆனால் சில வருடங்களிலேயே இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் வருகை இந்தி திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறு பட்ஜெட் படங்கள் தயாரிப்பது ஒரு போராட்டமாக உள்ளது என சினிமா உலகில் உள்ளவர்கள் புலம்பி வருகின்றனர். திரையரங்குகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட ஓடிடிகளும் இப்போது சிறு பட்ஜெட் படங்களைக் கண்டுகொள்வதில்லை. பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.