அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் விரைவாக பரவி வரும் காட்டுத்தீ இரண்டு தீயணைப்பு வீரர்களைப் பலியாக்கியுள்ளதோடு, அவ்விடத்தை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும் வெளியேற செய்துள்ளது. இதில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.
ரெட்டிங் நகரத்தில் இருந்து மட்டும் 40 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். அதிகாரிகள் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களை வெறியேற வலியுறுத்தி வருகிறார்கள். ஷாஸ்டா எனும் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால், நெருப்பு சுழற்காற்று உருவாகி மரங்களை வேரோடு சாய்ப்பதாகவும், கார்கள் அடித்து செல்லப்படுவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தீயால் குறைந்தது 500 கட்டுமானங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு இது அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை ஐந்து சதவீத பகுதியில் பரவியுள்ள இந்த தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த காட்டுத்தீ 48 ஆயிரம் ஏக்கர் நில்ப்பரப்பில் பரவியுள்ளது. சன் ஃபிரான்சிஸ்கோ நகரத்தைவிட இந்த பரப்பு பெரியதாகும்.
சூறாவளியை பார்ப்பதுபோல நெருப்பு சுழற்காற்றை நாங்கள் பார்க்கிறோம் என்று கலிஃபோர்னிய வன மற்றும் தீ பாதுகாப்பு துறையின் தலைவர் கென் பிம்லோட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.