ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் தீர்மானத்தை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருளாதார தடைகளை ஈரான் மீது விதிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஈராக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடல் நேற்று ஈரானை வந்தடைந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட சுலைமானியின் உடலை கண்டு கதறியழுதுள்ளார். பின்னர் சுலைமானியின் உடல் வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் லட்சகணக்கான மக்கள் திரண்டனர். சுமார் 10 லட்சம் பேர் ஊர்வலத்தில் கடந்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 48 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈரான் – அமெரிக்கா இடையே வெளிப்படையான போர் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.