வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த திட்ட தொடர்பான சாத்திய கூறுகளை கண்டறியுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிரி நாடுகள் அமெரிக்கா மீது ஏவுகணைகளை வீசினால் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை மூலம் அதனை இடைமறித்து அழிக்க முடியும்.
அதோடு அதிநவீன ஆயுதங்களை விண்வெளியில் தயார் நிலையில் வைத்திருக்கவும் அமெரிக்க பாதுகாப்பு துறை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யா தரப்பில் கூறப்பட்டதாவது, விண்வெளியை ராணுவமயமாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக சர்வதேச பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். அமெரிக்காவின் இந்த முயற்சியை ரஷ்யாவும், சீனாவும் கடுமையாக எதிர்க்கும் என தெரிவித்துள்ளது.