காங்கோ நாட்டில் மர்ம கும்பல் ஒன்று சிம்பன்சி குட்டிகளை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோ நாட்டில் ஃப்ராங்க் சாண்டேரோ என்பவர் விலங்குகள் சரணாலயம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சரணாலயத்தில் 5 சிம்பன்சி வகை குரங்கு குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 9ம் தேதி அங்கிருந்த சிம்பன்சி குட்டிகளில் 3 காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து சாண்டேரோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த சமயத்தில் சாண்டேரோவின் மனைவிக்கு போனுக்கு ஒரு புகைப்படம் மர்ம எண்ணிலிருந்து வந்துள்ளது. அதில் காணாமல் போன சிம்பன்சி குட்டிகள் இருந்துள்ளன.
சிம்பன்சி குட்டிகளை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், குட்டிகள் உயிரோடு வேண்டுமென்றால் தாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் எனவும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. சிம்பன்சி குட்டிகளை கடத்திய கும்பலை அந்நாட்டு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.