பூமியில் சமீப காலமாக பல்வேறு காரணங்களால் பருவநிலை மாற்றத்தை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்காலத்தில் நீர்களில் உயிரினங்களே வாழ முடியாத நிலை உண்டாகும் ஆபத்து உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் 75 சதவீதம் பகுதி கடலால் சூழப்பட்டுள்ள நிலையில் கடலில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் கடல் இருந்தாலும் நன்னீர் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. நன்னீர், கடல் நீர் என எதில் உயிரினங்கள் வாழ்ந்தாலும் அவற்றிற்கு ஆக்ஸிஜன் முக்கியமானதாக உள்ளது. நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் நீரில் உள்ள ஆக்ஸிஜன்களை செவில்கள் போன்ற பகுதிகளால் சுவாசித்து உயிர் வாழ்கின்றன.
ஆனால் சமீபமாக நீர்நிலைகளில் உள்ள நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் நீரில் வாழும் உயிரினங்கள் சரியான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மொத்தமாக அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வாயு மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன்கள் பெரும்பாலும் கடலில் இருந்தே பெறப்படுவதால் இதனால் மனித இனமும் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.