இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ்க்கு தனது மகளுக்காக தந்தை ஒருவர் பொம்மை ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்ய, டெலிவரி ஆன பொம்மையை பார்த்து வாய் பிளந்துள்ளனர்.
டிசம்பர் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாகவே பலரும் பல பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ரே லிட்டல் என்பவர் தனது மகளுக்காக க்ரின்ச் என்னும் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாப்பாத்திரத்தின் பொம்மையை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
இந்திய ரூபாயில் 50 ஆயிரத்திற்கு ஆர்டர் செய்த அந்த பொம்மையின் அளவை ரே லிட்டல் கவனிக்காமல் ஆர்டர் செய்துள்ளார். அதை வீட்டில் டெலிவரி செய்தபோதுதான் அது 35 அடி உயரமுள்ள பொம்மை என தெரிய வந்துள்ளது. தனது வீட்டை விட பெரிதாக உள்ள அந்த பொம்மையை உள்ளே கொண்டு செல்ல முடியாததால் வீட்டு வாசலிலேயே வைத்துள்ளார். இந்நிலையில் 35 அடி உயர க்ரின்ச் பொம்மையை பார்க்க சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பலர் குழந்தைகளுடன் வந்துள்ளனர்.
கூட்டம் அதிகரிக்கவே அவர்களிடம் தனது தந்தை நினைவாக நடத்தி வரும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி வசூலித்துள்ளார் ரே லிட்டல். கிட்டத்தட்ட 8 ஆயிரம் டாலர்கள் வசூலாகியுள்ளதாக கூறியுள்ள ரே லிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.