இன்று ரிலீசான சிம்புவின் பத்து தல என்ற திரைப்படத்தை ரோகிணி தியேட்டரில் காண வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தீண்டாமை கொடுமை ஏற்பட்டதை அடுத்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை ரோகிணி தியேட்டரில் இன்று பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுத்திருந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் படம் பார்க்க வந்தபோது அவர்களை உள்ளே விட ரோகிணி தியேட்டர் நிர்வாகிகள் மறுத்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்ததை அடுத்து இது குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தது. அதன்பின் தாமதமாக அவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் அந்த சகோதரியும் சகோதரர்களும் தாமதமாக திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.
நரிக்குறவர்களை ரோகிணி திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படாத விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் டுவிட் தற்போது வைரல் ஆகி வருகிறது.