உலகமே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அச்சுறுத்தலில் இருக்கும் நிலையில் சற்று முன்னர் ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ரஷ்யாவிலுள்ள குரில் என்ற தீவுகளில் சற்று முன்னர் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகி இருப்பதால் இந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை சேத விவரங்கள் வெளிவரவில்லை.
ரஷ்யாவின் குரில் தீவில் கடலுக்கு அருகே 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்
அதுமட்டுமின்றி ரஷ்யாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து சுனாமி தாக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் பகுதிகளிலுள்ள மக்களை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது