2020ம் ஆண்டிற்கான சிறந்த புகைப்பட நிருபருக்கான புலிட்சர் விருது காஷ்மீர் புகைப்படக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை கௌரவிக்கும் உலகளாவிய விருதாக புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளில் சிறந்த புகைப்படக்காரருக்கான விருது அசோசியேட் பிரஸ் புகைப்படக்காரர்கள் சன்னி ஆனந்த், முக்தார் கான் மற்றும் தார் யாசின் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அசோசியேட் பிரஸ் புகைப்படக்காரர்களான இவர்கள் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது இந்தியா விதித்த ஊரடங்கு உத்தரவின் காலங்களை புகைப்படமாக பதிவு செய்ததற்காக இந்த விருதை பெற்றுள்ளனர். இதற்கு பலர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள நிலையில், இந்த புகைப்படக்காரர்கள் வன்முறையை, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும், அவர்களுக்கு இந்த விருதை வழங்க கூடாது என்றும் அமெரிக்க இந்துக்களின் அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்திய உள்நாட்டு விவகாரங்களை குறிப்பிட்ட நோக்கத்தோடு அவர்கள் புகைப்படத்தின் மூலம் கருத்துகளை மாற்றி காட்டியதாகவும், அவர்கள் பாகிஸ்தானிடம் நிதியுதவி பெறுவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.