ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மையை தயாரித்து அதில் கட்டுரையும் எழுதி அசத்தியுள்ளார் ஒரு பல்கலைகழக மாணவி.
எமி ஹாகா என்னும் 19 வயது மாணவி, ஜப்பானின் மீ பல்கலைகழகத்தில் படித்து வருகிறார். மேலும் அவர் அப்பல்கலைகழகத்தின் நிஞ்சா வாரியத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் பல்கலைகழகத்தின் பேராசிரியர் யமாடா, தனது மாணவர்களை வரலாறு குறித்த ஒரு கட்டுரையை எழுதி வரவேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் கற்பனை திறனுடன் கூடிய கட்டுரைக்கு முதல் மதிப்பெண்ணான “ஏ” மதிப்பெண் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். ஹாகாவிற்கு ஏற்கனவே வரலாற்றில் ஆர்வம் அதிகம். ஆதலால் புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவர், அபுரிதசி என்ற பழங்கால நுட்பத்தை பயன்படுத்தி கட்டுரை எழுத திட்டமிட்டார். அதன் படி, சோயாபீன்ஸை ஊறவைத்து, அதை இடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, நீருடன் கலக்கி, 2 மணி நேரம் காத்திருந்து, கண்ணுக்கு தெரியாத ஒரு மையை தயாரித்துள்ளார்.
பின்பு அந்த மையை கொண்டு, ஒரு காகிதத்தில் கட்டுரையை எழுதியுள்ளார். ஈரம் காய்ந்த பிறகு அந்த காகிதத்தில் உள்ள எழுத்துகள் மறைந்துவிட்டன. அந்த வெற்று காகிதத்தை அவர் பேராசிரியரிடம் கொடுத்துள்ளார். மேலும் அந்த காகிதத்தின் ஓரத்தில், சாதாரண பேனாவை வைத்து “காகிதத்தை சூடு செய்யவும்” என எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேராசிரியர் யமாடா, கியாஸ் அடுப்பை பற்றவைத்து காகிதத்தை சூடாக்கிய போது, அதில் எழுத்துகள் தோன்றியதை பார்த்து ஆச்சரியப்பட்டார். அதன் பிறகு கற்பனை திறனால் தன்னை ஆச்சரியப்படுத்திய மாணவி ஹாகாவிற்கும் முதல் மதிப்பெண்ணான “ஏ” மதிப்பெண்னை வழங்கியுள்ளார்.