தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கிமீ நீளம் உடையதாகும். கடந்த வாரம் 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியை சேர்ந்தவர்கள் இந்த குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார்.
ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
10 நாட்களுக்கு பிறகு குகையில் சிக்கி கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குகையில் சிறுவர்கள் சுவாசிப்பதற்காக ஏர் டேங்குகளை பொருந்தும் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற கடற்படை வீரர் பலியானதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து தாய்லாந்து கடற்படை, சமான் தானாக முன் வந்து மீட்புப் பணிகளை செய்தார். இந்நிலையில் இரவு மீட்பு பணியின் போது குகையில் நீந்திக் கொண்டிருக்கும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழந்தார் என்று கூறியுள்ளது.