மக்கள் இலவசமாக ஏதாவது கிடைக்கிறதென்றால், அது தனக்கு தேவையில்லாவிட்டாலும் அதை வாங்க ஓடுவார்கள். ஆனால் எது இலவசமாக கிடைத்தாலும் அதற்கு ஆசைப்படுவது ஆபத்தை கொடுக்கும் என உணர்த்தியிருக்கிறது நைஜீரியாவில் நடந்த சம்பவம்.
நைஜீரியாவில் உள்ளது பெனு என்னும் மாநிலம். நேற்று பெட்ரோல் நிரம்பிய டேங்கர் லாரி அவ்வழியாக சென்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்த பெட்ரோல் வெளியேறி சாலையெங்கும் வெள்ளமாய் ஓடியிருக்கிறது.
இதை கண்ட அந்த கிராம மக்கள் பெட்ரோலை அள்ளிக்கொள்ள தங்கள் வீடுகளில் இருந்த வாளி, குடத்தையெல்லாம் தூக்கிக்கொண்டு ஓடிவந்திருக்கிறார்கள். மதிய வெயிலில்கூட சளைக்காமல் நான்கைந்து குடம் பெட்ரோலையும் நிரப்பி வீட்டுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அப்படி அள்ளிக்கொண்டிருக்கும்போது திடீரென டேங்கர் லாரி தீப்பிடித்து எரியத்தொடங்கியது. மின்னல் வேகத்தில் சாலையில் பரவிய தீ பெட்ரோல் சென்ற பாதையெங்கும் கிடுகிடுவென பரவ ஆரம்பித்தது. பெட்ரோலை அள்ளியவர்கள் கிட்டதட்ட உடல் முழுவதும் பெட்ரோலால் நனைந்திருந்தார்கள். வேகமாய் வந்த தீ கிராம மக்களை எரித்தது.
அந்த வழியாக வந்த பஸ் ஒன்று சாலையில் பெட்ரோல் கிடப்பது தெரியாமல் வண்டியை ஓட்டிசெல்ல, பஸ்ஸையும் தீப்பற்றி கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் நைஜீரியாவை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையுமே துயரில் ஆழ்த்தியுள்ளது.