அமெரிக்காவில் சிறை தண்டனை பெற்ற இளைஞர் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து அவரையே திருணம் செய்து கொண்டிருக்கிறார் இளம்பெண் ஒருவர். அவர்களுக்கு சிறைச்சாலையிலே தனி அறை அமைத்து கொடுத்திருக்கிக்கிறது சிறை நிர்வாகம்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்தவர் நினா. 2006ம் ஆண்டு தனது 16வது வயதில் மைக்கெல் என்ற வாலிபரை எதேச்சையாக ஒரு உணவு விடுதியில் சந்தித்துள்ளார் நினா. பார்த்த முதல் நாளே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அப்போது மைக்கெலுக்கு 17 வயது.
இருவரும் பழக தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகியிருக்காது. வடக்கு கலிப்பொர்னியா பகுதியில் ஆயுதங்களை கொண்டு மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார் மைக்கெல். அவருக்கு 23 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனாலும் நினா அவரை மறக்கவே இல்லை. மைக்கெலுக்கு கடிதம் எழுத தொடங்கினார். மைக்கெலும் நினாவுக்கு திரும்ப கடிதம் எழுதினார்.
இப்படியே ஒருவருக்கொருவர் கடிதத்தின் மூலம் பேசி வந்தனர். ஒரு கட்டத்திற்கு பிறகுதான் தான் மைக்கெல் மேல் காதல் கொண்டுள்ளதை உணர்ந்திருக்கிறார் நினா. ஆறு வருடங்கள் கழித்து மைக்கெலை முதன்முறையாக நேரில் சென்று சந்தித்தார் நினா. முதல்முதலாக நினாவை பார்த்த மெக்கெலுக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. பிறகு அடிக்கடி மைக்கெலை வந்து சந்திக்க தொடங்கினார் நினா.
மைக்கெலுக்கு நினா மீது காதல் இருந்தாலும், அதை நினா ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகத்திலேயே சொல்லாமல் தவிர்த்து வந்துள்ளார். 2016ம் ஆண்டில் ஒருநாள் நினாவிடம் தன் காதலை சொல்லியிருக்கிறார் மைக்கெல். அதை நினாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். பிறகு சிறை கம்பிகளுக்கிடையே வளர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.
2017ம் ஆண்டு சிறையிலேயே வைத்து மைக்கெலை திருமணம் செய்து கொண்டார் நினா. இவர்களுக்காக சிறையிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அறை ஒன்றையும் அளித்திருக்கிறது சிறை நிர்வாகம். ஒரு மாதத்தில் 48 மணி நேரம் மட்டுமே இருவரும் சந்தித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் தன் காதல் கணவரை சந்தித்துவிட்டு வரும் நினா அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் விரைவில் விடுதலை பெறுவார் எனவும், தாங்கள் சந்தோஷமாக எங்கள் வாழ்க்கையை வாழ்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நினா. தற்போது நினாவுக்கு 29 வயதும், மைக்கெலுக்கு 30 வயதும் ஆகிறது.